91 வயதில் இப்படி நடக்கும் என நினைத்துப் பார்க்கவே இல்லை.. தேவே கெளடா நெகிழ்ச்சி
May 29, 2023,04:56 PM IST
பெங்களூரு: 91 வயதில் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் தேவே கெளடா.
நாட்டில் உள்ள மிகவும் மூத்த, அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவர் தேவே கெளடா. ஜனதாதளத்திலிருந்து பிரிந்து மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
பஞ்சாயத்துத் தலைவராக, எம்எல்ஏவாக, எம்.பியாக, மாநில முதல்வராக, நாட்டின் பிரதமராக என அனைத்து உச்சங்களையும் பார்த்த மிகவும் எளிமையான தலைவர்தான் கெளடா. கூட்டணி ஆட்சிகள் நாட்டில் கோலோச்சி வந்த சமயத்தில் பிரதமர் பதவிக்கு உயர்ந்து சில காலம் அப்பதவியை அலங்கரித்தவர்.
தற்போது 91 வயதாகும் தேவே கெளடா முன்பு போல தீவிர அரசியலில் ஈடுபடுவதில்லை. அதேசமயம், முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களைப் பதிவுசெய்து வருகிறார். முக்கியமான நிகழ்வுகளில் பங்கேற்கவும் செய்கிறார். அந்த வகையில் டெல்லியில் நேற்று நடந்த புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு அவர் வந்திருந்தார்.
தனது வயதையும் பொருட்படுத்தாமல் அவர் விழாவில் கலந்து கொண்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வியப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தேவே கெளடா அளித்துள்ள பேட்டியில், எனது 91 ஆண்டு கால வாழ்க்கையில் இந்த அளவுக்கு நான் வருவேன் என்று ஒரு போதும் நினைத்துப் பார்த்தது இல்லை.
1962ம் ஆண்டு முதல் முறையாக கர்நாடக சட்டசபைக்குள் நுழைந்தேன். அதன் பிறகு தொடர்ந்து எம்எல்ஏவாக பதவி வகித்தேன். 1991ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 32 வருடம் எம்.பியாக இருந்துள்ளேன். பிரதமராகவும் இருந்தேன். இதையெல்லாம் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. பொது வாழ்க்கையில் இத்தனை தூரம் நான் வருவேன் என்பதை நினைத்துக் கூட பார்த்ததில்லை.
அதை விட முக்கியமாக, புதிய நாடாளுமன்றத்திற்கு நான் வருவேன், இங்கு அமருவேன், அதுவும் இத்தனை வயதில் என்பது நான் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. நாடு சுதந்திரமடைந்தது முதல் நமது நாடாளுமன்றம் பல நிகழ்வுகளை சந்தித்து விட்டது. பல ஏற்றங்களையும், தாழ்வுகளையும் அது பார்த்துள்ளது. தோல்விகளையும், வெற்றிகளையும் சந்தித்துள்ளது. ஆனால் எல்லாவற்றுக்கும் அப்பால் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் முயற்சிகளில் அது தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.