Depression: ஞாயிறு 8, திங்கள் கிழமை 13 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை!

Dec 30, 2022,07:54 AM IST

சென்னை:  வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் நாளை 8 மாவட்டங்களுக்கும், திங்கள்கிழமையன்று 13 மாவட்டங்களுக்கும் கன மழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தென் மேற்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது மேலும் மேற்கு தென் மேற்கு திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த  தாழ்வு நிலையானது, நாகப்பட்டனத்திற்கு 470 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு தென் மேற்கில் தொடர்ந்து நகர்ந்து 25ம் தேதி காலை இலங்கைக் கரையை நெருங்கும்.   26ம் தேதி காலை இது குமரி முனையை நெருங்கி வரும்.  இதன் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பரவலாக பல இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.

25ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் பரவலாக கன மழையை எதிர்பார்க்கலாம்.



26ம் தேதி தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கன மழையை எதிர்பார்க்கலாம்.

காற்றழுத்தத் தாழ்வு காரணமாக கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.