பணமதிப்பிழப்பு விவகாரம் : 4 நீதிபதிகள் அரசுக்கு ஆதரவு; ஒருவர் எதிர்ப்பு

Aadmika
Jan 03, 2023,09:22 AM IST

புதுடில்லி : 2016 ம் ஆண்டு நவம்பர் 08ம் தேதி, ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு செல்லாது என அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட குழுவில், நான்கு பேர், "மத்திய அரசு பணமதிப்பு செய்தது செல்லும். இந்த முடிவு ஒரே இரவில் எடுக்கப்பட்டது கிடையாது. அதற்கு முன் 6 மாதங்களாக ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்துள்ளது" என மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி உள்ளனர்.


அதே சமயம், ஒரே ஒரு நீதிபதி மட்டும் மத்திய அரசின் இந்த முடிவு சட்ட விரோதமானது என தெரிவித்துள்ளார். மேலும், பழைய செல்லாதரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள 52 நாட்கள் அவகாசம் கொடுத்த பிறகு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதி பி.ஆர்.கவாய் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.




மத்திய அரசு ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என வெளியிட்ட அறிவிப்பினை எதிர்த்து 58 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசின் இந்த கடுமையான முடிவில் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டாகவும் மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது. 


இந்த வழக்கில் கோர்ட் முடிவு எடுக்க முடியாது என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு பிறகு போதிய கால அவகாசம் கொடுத்து, பழைய செல்லாத நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வழிமுறைகளும் செய்யப்பட்டது. நன்கு ஆலோசிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட முடிவு தான் இது. கள்ள நோட்டுக்கள், பயங்கரவாத அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த பதுக்கல் பணம், வரி ஏய்ப்பு செய்து பதுக்கி வைக்கப்பட்டது ஆகியவற்றை வெளி கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட முடிவு இது என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.