யாத்திரையின்போது.. பெண்கள் கொடுத்த புகார்.. டீட்டெய்ல் கேட்டு ராகுலுக்கு நோட்டீஸ்!
புதுடில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் மேற்கொண்ட தனது பாரத் ஜோதா யாத்திராவின் ஸ்ரீநகரில் பேசியது தொடர்பாக விபரங்கள் அளிக்கும் படி டில்லி போலீஸ் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கன்னியாகுமரி துவங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தி, பாரத் ஜோதா யாத்திரை என்ற பாத யாத்திரை பயணத்தை சமீபத்தில் மேற்கொண்டார். இந்த யாத்திரையின் நிறைவாக ஸ்ரீநகரில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல், இப்போதும் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. நான் பாரத் ஜோதா யாத்திரை மேற்கொண்ட போது பெண்கள் பலரும் என்னிடம் வந்து, நான் பாலியல் துன்புறுத்தல்களால் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகிறோம். எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் என என்னிடம் வந்து கேட்டனர் என கூறி இருந்தார்.
இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல்கள் எந்த பகுதியில் நடக்கிறது? பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டதாக முறையிட்ட பெண்கள் யார்? அவர்கள் குறித்த விபரங்களை தாருங்கள். அந்த சம்பவம் பற்றி உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என கேட்டு, ராகுல் காந்திக்கு டில்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
ஏற்கனவே இந்திய ஜனநாயகம் பற்றி லண்டனில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் பார்லிமென்டில் புயலை கிளப்பி உள்ளது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பி.,க்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் பாரத் ஜோதா யாத்திராவின் போது ராகுல் பேசிய பேச்சையும் டில்லி போலீஸ் கிளப்பி விட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களை வைத்து ராகுல் காந்தியை கிண்டல் செய்து சோஷியல் மீடியாவில் மீம்ஸ்கள் அதிக அளவில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ராகுலுக்கு நேரம் சரியில்லை...அவருக்கு வாயில் வாஸ்து சரியில்லை...இப்படி வாயை விட்டு ஏடாகூடமாக மாட்டிக் கொண்டாரே...இனி இந்த பிரச்சனைகளுக்கு ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் ரியாக்ஷனும் பதிலும் என்னவாக இருக்கும் என பலவிதங்களில் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.