அடி ஆத்தி.. 2 ஆண்டுகளாக பில் கட்டாமல் ஸ்டார் ஓட்டலில் தங்கி இருந்த பலே ஆசாமி!
டெல்லி : டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த கட்டணமும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். தற்போது அந்த நபர் மீது விமான நிலைய போலீசிடம், ஓட்டல் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
டெல்லியில் Birds Airports hotel private limited என்ற நிறுவனம் Roseate என்ற 5 நட்சத்திர ஓட்டலை நடத்தி வருகிறது. இதில் அன்குஷ் தத்தா என்பவர் கட்டணம் ஏதும் செலுத்தாமல் 603 நாட்களாக வசித்து வருகிறார். இதனால் ஓட்டலுக்கு ரூ.58 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் இதுவரை ஒருமுறை கூட ஓட்டலுக்கு பில் கட்டியதே இல்லையாம்.
ஓட்டலின் தலைமை நிர்வாக அதிகாரி, யாரெல்லாம் பில் செலுத்தாமல் பாக்கி வைத்து இருக்கிறார்கள் என பார்ப்பதற்காக ஓட்டல் கம்யூட்டரை ஆன் செய்து பார்த்துள்ளார். அதில் ஓட்டல் விதிகளை மீறி அன்குஷ் தத்தா பல காலமாக தங்கி இருப்பது கண்டும், அவரது பில் பாக்கியையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த தவறு எப்படி நடந்தது, இரண்டு ஆண்டுகளாக ஒருவர் எப்படி ஒருமுறை கூட பில் கட்டாமல் தங்கி இருக்க முடியும் என ஓட்டல் நிர்வாகம் விசாரணையை துவக்கி உள்ளது.
இதில் ஓட்டல் ஊழியரான பிரகாஷ் என்பவர் அன்குஷ் தத்தாவிடம் பணம் வாங்கிக் கொண்டு, ஓட்டல் சாஃப்ட்வேரில் குளறுபடி செய்து, பில் கட்டாமல் அவர் தங்குவதற்கு உதவி செய்துள்ளார். ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள், அவர்கள் தங்குவது, அவர்களின் கணக்குகளை கையாள்வது எல்லாமே பிரகாஷின் கட்டுப்பாட்டில் தான் இருந்துள்ளது.
ஓட்டலில் தங்கிய பலரின் விபரங்கள் கம்ப்யூட்டரில் இருந்து அழிக்கப்பட்டு, அதிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது இந்த குளறுபடிகளை கண்டுபிடித்த ஓட்டல் நிர்வாகம் அன்குஷ் தத்தா, பிரேம் பிரகாஷ், இன்னும் சில ஓட்டல் ஊழியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்துள்ளது. தற்போது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.