6 கர்நாடகா ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்

Aadmika
Jul 25, 2023,09:33 AM IST
பெங்களூரு :  கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் 6 க்கும் அதிகமானவர்களுக்கு, பணம் கேட்டு வாட்ஸ்ஆப் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. 

கொலை மிரட்டல் விடுத்துள்ளவர்கள் தாங்கள் கேட்ட பணத்தை, பாகிஸ்தான் வங்கி கணக்கிற்கு மாற்றச் சொல்லி மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.



ஜூலை 12 ம் தேதி இரவு 7 மணியளவில் சர்வதேச நம்பரில் இருந்து வாட்ஸ்ஆப் மெசன்ஜர் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அதுவும் ஐகோர்ட் நீதிபதிக்கு ஐகோர்ட்டால் வழங்கப்பட்ட நம்பருக்கு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாக முரளீதர், முகம்மது நவாஸ், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட நீதிபதிகளுக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் உருதி மொழிகளில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. 
பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆவர். இந்த கொலை மிரட்டல், துபாய் கேங்கால் அனுப்பப்பட்டுள்ளது. 

5 மர்ம எண்களில் இருந்து  இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் அனுப்ப சொல்லி இந்த மிரட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய குற்றவியல் தடுப்பு பிரிவு போலீசாரும் மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையாகவே இந்த மிரட்டலை துபாய் கேங்க் தான் அனுப்பி உள்ளதா என்றும் விசாரைண நடத்தப்பட்டு வருகிறது.