ரொம்ப  நேரம் உட்காராதீங்க.. அப்பப்ப 3 நிமிஷம் நடங்க.. சுகர் வராது!

admin
Apr 27, 2023,03:44 PM IST

என்னதான் ரெகுலராக உடற்பயிற்சி எல்லாம் செய்தாலும் கூட, நீண்ட நேரம் எந்த ஆக்டிவிட்டியும் இல்லாமல் அமர்ந்திருப்பது உடல் நலனுக்கு கெடுதலாம். இதுபோன்று ஆணி அடித்தாற் போல நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு டைப் 1 சர்க்கரை வியாதி வரக் கூடுமாம்.


எனவே உட்கார்ந்து வேலை பார்க்கும் வாய்ப்பு உள்ளோர், நீண்டநேரம் அமருவதைத் தவிர்க்க வேண்டும். மேலும்  அரை மணி நேரத்திற்கு ஒருமுறை 3 நிமிடம் நடந்து கொடுக்க வேண்டுமாம். அதுபோல செய்தால் டைப் 1 சர்க்கரை வியாதியைத் தவிர்க்க முடியுமாம்.


டைப் 1 சர்க்கரை வியாதி வந்தால் அவர்களுக்கு இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும் அல்லது அறவே இருக்காது. இப்படிப்பட்ட நிலையைத் தவிர்க்க நீண்ட நேரம் அமராமல் அவ்வப்போது எழுந்து நடந்து கொடுப்பது நல்லது.  இதுபோல செய்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருக்குமாம்.


இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த சர்க்கரை வியாதி நிபுணர் டாக்டர் எலிசபெத் ராபர்ட்சன் கூறுகையில், டைப் 1  சர்க்கரை வியாதி வந்து விட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்வதற்கு முயல வேண்டும்.  உடல் ரீதியாக ஆக்டிவாக இருப்பது நல்லது.  உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. மாறாக, நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல், அவ்வப்போது , குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து 3 நிமிடம் அளவுக்கு நடந்தால் நல்லது.


போன் வந்தால் அப்படியே அமர்ந்து கொண்டு பேசாமல் நடந்து கொண்டே பேசுவது, அவ்வப்போது டைமர் வைத்து பிரேக் எடுத்துக் கொண்டு நடப்பது என்று பழக்கப்படுத்த வேண்டும்.  நீண்ட நேரம் அமருவதைத் தவிர்க்கும் வகையில் ஏதாவது செய்து கொண்டே இருப்பது நல்லது. அடிக்கடி நடந்தாலே ரத்தத்தில் சர்க்கரை அளவு மேம்படும். சிக்கல்கள் வருவதைத் தடுக்க அது உதவும் என்றார் அவர்.


இனிமேல் அலுவலகத்தில் யாராவது அடிக்கடி நடந்தால் அவர்களைப் பார்த்து குழப்பமடையாதீங்க.. அவர் ஹெல்த்தில் அக்கறை உள்ளவராகக் கூட இருக்கலாம்.. நீங்களும் அவ்வப்போது நடந்து பழகுங்க!