ரூ. 306 கோடி.. திமுகவுக்கு வந்த "அடையாளம் தெரியாத" டொனேஷன்.. !
May 18, 2023,01:34 PM IST
டெல்லி: பிராந்தியக் கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத மூலங்களிலிருந்து (unknown sources) பெருமளவில் நிதி வந்திருப்பதாக ஜனநாயக சீரமைப்பு அமைப்பு (ADR) என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அது ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பிராந்தியக் கட்சிகளுக்கு கடந்த 2021- 22 நிதியாண்டில் வந்த நன்கொடைகள் குறித்த விவரத்தை அது வெளியிட்டுள்ளது. பிராந்தியக் கட்சிகளுக்கு இந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் நிதி வந்திருப்பதாக தெரிவித்துள்ள ஏடிஆர் அதில் கிட்டத்தட்ட ரூ. 887.55 கோடி நிதி, அடையாளம் தெரியாத மூலங்களிடமிருந்து வந்ததாக கூறியுள்ளது.
அடையாளம் தெரியாத மூலங்கள் என்றால் - தேர்தல் பான்டுகள் மூலம் வந்த நன்கொடைகள், கூப்பன் விற்பனை, நிவாரண நிதி, இதர வருமானங்கள், தானாக முன்வந்து தரும் நன்கொடைகள், பொதுக்கூட்டங்கள் நடத்தி அதன் மூலம் கிடைத்த வருவாய் என்பதாகும்.
பிராந்தியக் கட்சிகளுக்கு வந்த நிதியில் தேர்தல் பாண்டுகள் மூலம் 827.76 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கூப்பன் விற்பனை மூலம் கிடைத்த நிதி ரூ. 38.35 கோடியாகும். தானாக முன்வந்து அளித்த நிதி ரூ. 21.29 கோடியாகும்.
மொத்தம் 54 அங்கீகரிக்கப்பட்ட பிராந்தியக் கட்சிகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால் அதில் பாதிக் கட்சிகள்தான் வருடா வருடம் தங்களது நிதிக் கணக்கு விவரத்தை முறையாக தாக்கல் செய்கின்றன. இந்தக் கட்சிகளின் மொத்த வருமானம் ரூ. 1165.58 கோடியாகும். இதில் தெரிந்த நிதியாதாரங்கள் மூலம் கிடைத்த நன்கொடைகள் ரூ. 145.42 கோடியாகும்.