பொது சிவில் சட்டம்... "முதலில் இந்து மதத்தில் அமல்படுத்துங்கள்".. திமுக எம்.பி. பேச்சு
Jun 28, 2023,10:10 AM IST
சென்னை: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக இருந்தால் அதை முதலில் இந்துக்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நேற்று நடந்த பாஜககூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து விவரித்தார். முஸ்லீம் பெண்கள் படும் சிரமங்களையும், அநீதிகளையும் அவர் விளக்கிப் பேசினார். ஒரே நாட்டில் எப்படி இரண்டு வகையான சட்டம் இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடியின் பேச்சு விவாதங்களை கிளப்பியுள்ளது. திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். டிகேஎஸ் இளங்கோவன் இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தியாளருக்கு அளித்துள்ள பேட்டியின்போது கூறியதாவது:
முதலில் பொது சிவில் சட்டத்தை இந்து மதத்தில் அமல்படுத்த வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்துவும் நாட்டின் எந்தக் கோவிலிலும் பூஜை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். எங்களுக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை. அரசியல்சாசனம் கொடுத்துள்ள உரிமைகளை நாம் முதலில் காக்க வேண்டும். அதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் அரசியல்சாசனம் பாதுகாப்பு கொடுக்கிறது. அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.