ஒடிஷா ரயில் விபத்து.. பட்நாயக்குடன் ஸ்டாலின் பேச்சு.. கருணாநிதி பிறந்த நாள் கூட்டம் ரத்து
Jun 03, 2023,09:56 AM IST
சென்னை: ஒடிஷா ரயில் விபத்தைத் தொடர்ந்து அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன் மூலம் பேசியுள்ளார். மேலும் இன்று திட்டமிடப்பட்டிருந்த மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன், பெங்களூரு - ஹவுரா ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதிக் கொண்டதால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், துணை ராணுவப் படையினர், தீயணைப்புப் படையினர் என பலரும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் சென்னை, பெங்களூர் ரயில்கள் சிக்கியிருப்பதால் தமிழ்நாடு, கர்நாடகத்தில் சோகம் நிலவுகிறது. விபத்து நடந்ததும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கைத் தொடர்பு கொண்டு பேசினார். விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த அவர் மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அறிவித்தார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒடிஷா விரைகிறார்.