மத்திய அரசின் அவசர சட்டம்.. ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு!

Su.tha Arivalagan
May 24, 2023,09:09 AM IST
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவாக இருப்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நாங்கள் இருக்கிறோம். டெல்லி அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் வரும்போது அதற்கு எதிராக வாக்களிப்போம் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.



ஆம் ஆத்மி அரசுக்கே அதிகாரிகளைக் கையாளும் அதிகாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த அடுத்த நாளே அந்தத் தீர்ப்பை காலி செய்யும் வகையில் அதிரடியான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் அதிகாரிகள் இடமாற்றம், நியமனம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனி ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில் 3 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒருவர் டெல்லி முதல்வர். மற்ற இருவரும் மத்திய அரசு அதிகாரிகள். பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். இரு மத்திய அரசு அதிகாரிகளும் கெஜ்ரிவால் முடிவை ஏற்காவிட்டால் அவரது முடிவு அமலுக்கு வராது.

இந்த அவசரச் சட்டத்தை  ஆம் ஆத்மி அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. பல்வேறு எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிராக கருத்து கூறியுள்ளன. இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பேசியுள்ளார். தற்போது காங்கிரஸும் ஆம் ஆத்மி அரசுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸுக்கும் எப்போதும் ஆகாது. காங்கிரஸை அழிக்க வந்த கட்சியாகவே ஆம் ஆத்மி பார்க்கப்படுகிறது.

ஆனால் மத்திய அரசின் அவசரச் சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மேலும் அதிகாரிகளை மரியாதையுடன் நடத்த ஆம் ஆத்மி அரசு முன்வர வேண்டும் என்றும்  காங்கிரஸ் அறிவுரை கூறியுள்ளது. இந்த விஷயத்தில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் போல செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் ஆலோசனை கூறியுள்ளது.

மறுபக்கம் அனைத்து எதிர்க்கட்சிகளையும் தனக்கு ஆதரவாக திருப்பும் வேலையில் கெஜ்ரிவால் தீவிரமாக இறங்கியுள்ளார். ஒவ்வொரு தலைவரையும் அவர் பார்க்கவுள்ளார். மும்பைசெல்லும் அவர் அங்கு சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார்.