தவறான கார் டிரைவரால்.. தந்தை பலி.. 15 வயது சிறுவன் படுகாயம்.. கோவையில் ஷாக்!
Jun 25, 2023,12:18 PM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் தவறான பாதையில் வேகமாக வந்த கார் பைக் மீது மோதியதில் தந்தை பலியானார், அவருடன் அமர்ந்து வந்த 15 வயது மகன் படுகாயமடைந்தார்.
கோவையைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் தனது 15 வயது மகன் அஜ்மலுடன் பைக்கில் கபடிப் போட்டிக்குப் போய்க் கொண்டிருந்தார். அஜ்மல் கபடி வீரர் ஆவார். கே.ஜி. சாவடி பகுதியில் பைக் போய்க் கொண்டிருந்தபோது எதிரே தவறான திசையில் கார் ஒன்று வேகமாக ஓவர் டேக் செய்து நுழைந்தது.
இதை எதிர்பாராத ஜாகிர் உசேன் நிலை தடுமாறிப் போனார். வேகமாக வந்த கார், பைக் மீது அதிவேகமாக மோதி தூக்கி வீசியது. இதில் பின்னால் வந்த டெம்போ டிராவலர் மீது பைக் விழுந்தது. தூக்கி வீசப்பட்ட ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே பலியானார். அஜ்மல் படுகாயமடைந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஜாகிர் உசேன் உடலை மீட்டும், அஜ்மலை மீட்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது. அதில் பைக் சரியான பாதையில் செல்வதும், கார்தான் தவறான முறையில் ஓவர் டேக் செய்து பைக் மீது மோதியதும் தெளிவாகத் தெரிகிறது.
ஒரு தவறான டிரைவரால் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.