கோயம்புத்தூர் டிஐஜி விஜயக்குமார் தற்கொலை.. முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

Su.tha Arivalagan
Jul 07, 2023,10:01 AM IST

கோயம்புத்தூர்: கோவை சரக டிஐஜியாக செயல்பட்டு வந்த விஜயக்குமார் ஐபிஎஸ் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம்தான் நியமிக்கப்பட்டார் விஜயக்குமார். மக்களின் பாராட்டைப் பெறும் வகையில் பணியாற்றி வந்த விஜயக்குமார் கோவையில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் கைத்துப்பாக்கியால் சுட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


விஜயக்குமார் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. விஜயக்குமாரின் திடீர் மரணம் காவல்துறையில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

டிஐஜி விஜயக்குமார் மரணத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். 

விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.

அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.  டிஐஜி விஜயக்குமாரின் மரணத்திற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.