வெளியில் ஹீட் அதிகரிக்க அதிகரிக்க.. வீட்டுக்குள் உக்கிரமாகும் "கலவரம்".. கலகல சர்வே!
Jul 01, 2023,03:44 PM IST
டெல்லி: புவி வெப்பமயமாதலால் வீட்டு வன்முறையும் அதிகரிப்பதாக ஒரு சர்வேயில் சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, நேபாளம், பாகிஸ்தானில் இந்த வீட்டு வன்முறை அதிகரிப்பு காணப்படுவதாக இந்த சர்வே கூறியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், நேபாள நாடுகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் யாருமே ஒரு முறை கூட ஆண்களுடன் உடல் ரீதியாக ஒன்று சேர்ந்தவர்கள் ஆவர். அதாவது திருமணம் ஆனவர்கள் அல்லது லிவ் இன் போன்ற உறவில் இருப்பவர்கள் ஆவர்.
இவர்களிடையே நடத்திய ஆய்வின்போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்ததாம். வருடா வருடம் உயரும் வெப்ப நிலை காரணமாக இவர்கள் வீட்டு வன்முறைக்கு ஆளாவதும் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆண்களுடன் உறவில் உள்ள பெண்கள் வீட்டு வன்முறைக்குள்ளாவது 21 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்றும் இந்த சர்வே கூறுகிறது. குறிப்பாக இந்தியாவில் இது 23.5 சதவீதமாக இருக்கும் என்றும் இது கணித்துள்ளது.
ஜமா சைக்கியாட்ரி என்ற இதழில் இதுதொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள மத்திய வர்க்கம் மற்றும் குறைந்த வருமானப் பிரிவு பெண்களுக்கிடையே அதிகரிக்கும் குடும்ப வன்முறை என்ற பெயரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.