மதுரை, தேனி வழியாக.. சென்னை டூ போடிநாயக்கனூர் புது ரயில்.. ஜூன் 16 முதல்!
Jun 03, 2023,04:45 PM IST
சென்னை: சென்னையிலிருந்து மதுரை, தேனி வழியாக போடிநாயக்கனூர் செல்லும் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 16ம் தேதி முதல் ஓடத் தொடங்கும்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் இந்த ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரையிலிருந்து தற்போது சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இரவு 10.50 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.55க்கு சென்னை சென்டிரலை இது அடையும். இந்த ரயில் ஜூன் 15ம் தேதி முதல் போடி வரை நீட்டிக்கப்படுகிறது.
நீட்டிக்கப்படும் சென்னை - போடிநாயக்கனூர் ரயிலானது தினசரி இரவு 10.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு மதுரையை வந்தடையும். அங்கிருந்து 7.15 மணிக்குக் கிளம்பி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக காலை 9.35 மணிக்கு போடியை சென்றடையும். மறு மார்க்கத்தில் போடியிலிருந்து இரவு 8.30 மணிக்குக் கிளம்பி 10.45 மணிக்கு மதுரை வரும். அங்கிருந்து 10.50 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.55க்கு சென்னை சென்டிரல் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் வாரம் 3 நாட்களுக்கு இயக்கப்படும்.
இதேபோல மதுரை -தேனி இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலானது போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்படுகிறது. தினசரி காலை 8.20 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி வட பழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக காலை 10.30 மணிக்கு போடியை சென்றடையும். மறுமார்க்கத்தில், போடியிலிருந்து மாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு மதுரைக்கு இரவு 7.50 மணிக்கு வந்தடையும்.