ஜூலை 12ம் தேதி வரை.. செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. கோர்ட் உத்தரவு

Su.tha Arivalagan
Jun 28, 2023,04:02 PM IST
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி சிறைக்காவலை நீட்டித்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

நிதி மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி. நெஞ்சு வலி என்று கூறியதைத் தொடர்ந்து அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில் காவேரி மருத்துவமனைக்கு இடம் மாற்றப்பட்டார்.



காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இருதயபைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். இந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை காவலில் அனுப்பி  நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அமலாகக்கத்துறை அவரை விசாரிக்க முடியவில்லை.

அவரது காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி நலம் விசாரித்தார். பின்னர் அவரது நீதிமன்றக்காவலை ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையால் ஜூலை  12ம் தேதி வரை விசாரிக்க முடியாத நிலை நிலவுகிறது.