"கில்லி"  மாதிரி ரெடியாகும் வில்லிவாக்கம் ஏரி.. நடுவே "தொங்கு பாலம்"!

Su.tha Arivalagan
Jul 03, 2023,11:28 AM IST
சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள பிரமாண்டமான ஏரி பக்காவாக ரெடியாகி விட்டது. ஏரி மிகப் பிரமாதமாக தயாராகியுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை நகருக்குள் உள்ளேயும், வெளியிலும் இருக்கும் ஏரிகளைப் புதுப்பித்து அழகூட்டி அதை மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் பணியை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. ஆவடி ஏரி இப்படித்தான் அழகூட்டப்பட்டது. இப்போது வில்லிவாக்கம் ஏரியும் இதேபோல அழகுடன் சீரமைக்கப்பட்டுள்ளது.



வில்லிவாக்கம் ஏரியானது ரூ. 45 கோடி செலவில் எழிலார்ந்த ஏரியாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக புதுப்பிக்கும் பணிகள் தாமதடைந்தாலும் கூட தற்போது மிகப் பிரமாதமாக ஏரியை சீரமைத்துள்ளனர் அதிகாரிகள். ஏரிக்கு அருகே ஒரு தீம் பார்க்கும் உருவாக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நடுவே ஒரு தொங்கு (சஸ்பென்ஷன்) பாலம் அமைக்கப்பட்டுள்ளது கண்ணைக் கவரும் வகையில் உள்ளது.

ஏரியை அழகுபடுத்தும் பணியில் ஒன்றாக ஏரிக் கரைப் பகுதியில் வசித்த குடும்பங்கள் பல அங்கிருந்து வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு வேறு பகுதிகளில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.



புதுப்பிக்கப்பட்ட ஏரி வளாகத்தில் சஸ்பென்ஷன் பாலம் தவிர, ஹோட்டல்கள், பவுலிங் விளையாட்டு அரங்கம், ஆம்பி தியேட்டர், பொம்மை ரயில், மீன் கண்காட்சியகம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.  இதில் சிறப்பம்சமே சஸ்பென்ஷன் பாலம்தான். ஏரியின் குறுக்கே 250 மீட்டர் நீளத்துக்கு இது அமைக்கப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து 12.5 மீட்டர் உயரத்தில் இது அமைந்திருக்கும். 

புதுப்பிக்கப்பட்டுள்ள ஏரியில் நீர் கொள்ளளவு 300 எம்எல்டி என்று டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு கூடுதல் நீரை சேமிக்க வகை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.