தக்காளி என்னோட டிபார்ட்மென்ட் இல்லைங்க.. கலகலன்னு சிரிச்ச மேயர் பிரியா!

Su.tha Arivalagan
Jul 08, 2023,04:44 PM IST
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிடம், தக்காளி விலையைக் குறைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்யுமா என்று கேட்ட கேள்விக்கு,  தக்காளி என் டிபார்ட்மென்ட் இல்லைங்க என்று கூறி கலகலவென சிரித்தார் மேயர் பிரியா.

தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து மக்களை கடுப்பாக்கி வருகிறது. இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்ந்தவண்ணமே இருப்பதால் இல்லத்தரசிகள் சோர்வடைந்து விட்டனர். தற்போது விலை சற்று பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு கொஞ்சம் இறங்கி வருகிறது.



இந்த நிலையில்  மக்களுக்கு வசதியாக தக்காளியை குறைந்த விலையில் கொடுக்க மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பின்னணியில் இன்று சென்னையில்  மேயர் பிரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர், மாநகராட்சி சார்பில் தக்காளியை குறைந்த விலையில் விற்க ஏற்பாடு செய்யுமா என்று கேட்டார்.

அதைக் கேட்ட மேயர் பிரியா, தக்காளி என் டிபார்ட்மென்ட் இல்லைங்க. பள்ளி கேளுங்க, ரோடு கேளுங்க, ஹாஸ்பிட்டல் கேளுங்க பார்க் கேளுங்க என்று கூறியபடி கலகலவென சிரித்தார். ஆனாலும் விடாத அந்த செய்தியாளர் நீங்க, மாமன்னன் குறித்து சொல்லும்போது தக்காளி விலை குறித்து சொல்ல என்ன பிரச்சினை என்று கேட்டார்.

இதைக் கேட்ட மேயர் பிரியா கலகலவென சிரித்தபடி அவர் சும்மா கேட்கிறார் என்று கூறியபடி நகர்ந்து சென்றார்.

கல்விச் சுற்றுலா

முன்னதாக 51 மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கல்விச் சுற்றுலாவைத் தொடங்கி வைத்தார் மேயர் பிரியா. இதுதொடர்பாக அவர் கூறுகையில், பெருநகர சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 2023-2024ல் குறிப்பிடப்பட்டதை செயல்படுத்தும் விதமாக சென்னை பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களில் முதற்கட்டமாக 521 மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதை முன்னிட்டு, இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களுடன் கலந்துரையாடி வழியனுப்பி மகிழ்ந்தோம் என்று கூறியுள்ளார்.