லாரன்சின் ருத்ரன் படத்தை வெளியிட தடை...ஏன் அப்படி என்ன பிரச்சனை?

Aadmika
Apr 12, 2023,10:58 AM IST

சென்னை : நடிகர் லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை வெளியிடுவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் தடையை விலக்கி, படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழு இறங்கி உள்ளது. 


டைரக்டர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ருத்ரன். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் ஆக்ஷன், த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. 


படத்தின் ப்ரொமோஷன், டிரைலர் ஆகியவை ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ருத்ரன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 24 ம் தேதி வரை வெளியிடக் கூடாது என சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 


ருத்ரன் படத்தின் இந்தி உள்ளிட்ட பிற மொழி டப்பிங் உரிமைகளை ரெவன்சா என்ற நிறுவனம் பெற்றிருந்தது. டப்பிங் உரிமைக்காக ரூ.12.25 கோடிக்கு பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக முன் பணமாக ரூ.10 கோடி செலுத்திய நிலையில், மேலும் ரூ.4.5 கோடி கேட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்துள்ளதாக ரெவன்சா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்தை ஏப்ரல் 24 ம் தேதி வரை ரிலீஸ் செய்ய கூடாது என இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. இதனால் ரெவன்சா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்கை திரும்பப் பெற்று, படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இறங்கி உள்ளது.