ஈரோடு இடைத்தேர்தல்...தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

Aadmika
Feb 21, 2023,02:54 PM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.



ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது, பல விதமான முறைகேடுகள் நடக்கிறது என எதிர்க்கட்சியான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலவிதமான புகார்களை தெரிவித்து வந்தனர். இதற்கு திமுக தரப்பிலும் பதில் அளிக்கப்பட்டு வந்தது.


ஈரோடு தேர்தலை ரத்து செய்யுங்க...தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்த தேமுதிக


இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார்களை விசாரிக்க ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அப்படி குழு அமைக்கப்படும் வரை ஈரோடு தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றுமண சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழுவையும் அமைக்க வேண்டும் என கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று (பிப்ரவரி 21) விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், இதே போன்ற வழக்கில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.