ஜூலை 13ல் "சந்திரயான் 3" பயணம் தொடங்கும்.. ஆகஸ்ட்டில் நிலாவில் தரையிறங்கும்!
Jun 30, 2023,09:35 AM IST
டெல்லி: இந்தியாவின் நிலவுப் பயணத்தின் அடுத்த மைல் கல் ஜூலை 13ம் தேதி தொடங்கவுள்ளது. அன்றுதான் சந்திரயான் 3 விண்கலத்தின் நிலவுப் பயணம்தொடங்குகிறது. ஆகஸ்ட் மாதம் நிலாவில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முந்தை விண்கலங்கள் இறங்கத் திட்டமிட்டது போலவே நிலாவின் தென் முனைப் பகுதியில் அதே இடத்தில்தான் சந்திரயான் 3 விண்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள விக்ரம் லேன்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது வெற்றிகரமாக நடந்தால் நிலவின் தென்முனையில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் விண்கலமாக சந்திரயான் 3 வரலாறு படைக்கும்.
இஸ்ரோ உருவாக்கியுள்ள சந்திரயான் 3 விண்கலமானது ஜூலை 13ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா விண்கலம் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படும். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் பயணம் செய்து நிலவில் ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும்.
இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம்தான் நிலாவில் நீரும், ஹைட்ராக்ஸில் மூலக்கூறுகளும் இருப்பதைக் கண்டறிந்தன. இந்த விண்கலமானது நாசாவின் சாதனங்களையும் உடன் எடுத்துச் சென்றது என்பது நினைவிருக்கலாம்.