நிலவை நோக்கி வேகமாக நகரும் சந்திரயான் 3..  4வது சுற்றுப் பாதையைக் கடந்தது

Aadmika
Jul 21, 2023,02:27 PM IST
பெங்களூரு : நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 3 னிண்கலம் நிலவை திட்டமிட்டபடி மெல்ல நெருங்கி வருவதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் நிலவை நோக்கிய தனது பயணத்தை ஜூலை 14 ம் தேதி துவக்கியது. ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை இது நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இஸ்ரோ சார்பில் சர்வதேச நிலவு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில், சந்திரயான் 3, நிலவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வெற்றிகரமாக நான்காவது நீள்வட்ட பாதையை சந்திரயான் 3 கடந்துள்ளது.



அடுத்த கட்டத்தை ஜூலை 25 ம் தேதி பகல் 2 முதல் 3 மணிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. இப்போது சந்திரயான் 3 விண்கல பயணத்தின் சரியான தூரத்தை உடனடியாக வெளியிட முடியாது. ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ல் நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 பயணிக்க துவங்கும். நிலவின் சுற்றுவட்ட பாதையில் 5 நாட்களுக்கும் மேலாக சந்திரயான் 3 பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேன்டர்கள், வெற்றிகரமாக நிலவில் இறங்கினால் அது விண்வெளி அறிவியலில் இந்தியாவுக்கு மிகப் பெரிய சாதனையாக அமையும். இந்தியாவின் விண்கலம் ஒன்று வெற்றிகரமாக நிலவில் இறங்கிய சாதனையோடு, அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து நிலவில் காலடி எடுத்து வைத்த நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்குக் கிடைக்கும்.