மத்திய பட்ஜெட் 2023 : மாத சம்பளதாரர்களுக்கு குட் நியூஸ் சொல்வாரா நிர்மலா சீதாராமன்?

Aadmika
Jan 29, 2023,04:11 PM IST
புதுடில்லி : விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்கள், மாத சம்பளம் பெறுவோர் ஆகியோரை குஷிப்படுத்தும் வகையில் பல முக்கிய அறிவிப்புக்கள் வெளியாகலாம் என பெருமாபாலான பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2023-2024 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 01 ம் தேதி மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது இவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் ஆகும். பட்ஜெட் உரை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். 2024 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வர உள்ளதால், அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.


அதனால் இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு அதிகம் பயனளிக்கும் வகையிலான பல அறிவுப்புக்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக வருமான வரி உச்சவரம்பில் மிகப் பெரிய மாற்றம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு முதன் முதலில் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில், அப்போதைய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, வருமான வரி உச்சவரம்பை ரூ.2.5 லட்சம் என நிர்ணயித்தார்.

அதற்கு பிறகு 2019 ம் ஆண்டு வரை அது மாற்றப்படாமல் இருந்தது. ஆனால் வருமான வரி உச்சவரம்பை உயர்த்தினால் அது மாத சம்பளதாரர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என அரசுக்கு நிபுணர்கள் பலர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பெரும்பாலான அரசு துறைகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையிலும் இது இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படாததால் இந்த ஆண்டு நிச்சயம் வருமான வரி உச்சவரம்பு பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் 2023 எதிர்பார்ப்புக்கள் :

மாத சம்பளதாரர்களுக்கான வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படலாம்.

இறக்குமதி செய்யப்படும் விவசாய பொருட்கள், ரசாயன உரங்கள் போன்றவற்றிற்கு வரி சலுகை அளிக்கப்படலாம். 

நகை மற்றும் ஆபரண துறையில் அதிக வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலான அறிவிப்புக்கள் இருக்கலாம். 

சிறு, குறு மற்றும் வங்கித்துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கலாம்.

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல அறிவிப்புக்கள் இடம்பெறலாம்.

பொருளாதார மந்தநிலை காரணமாக ஐடி துறை நிறுவனங்கள் சலுகைகள் கேட்டு வருவதால் அது பற்றிய அறிவிப்புக்கள் வரலாம்.

பாதியில் நிற்கும் ரயில்வே பணிகள், புதிய விமான நிலையங்கள் திறப்பது போன்றவற்றை விரைந்து முடிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்.

தேர்தல் வர உள்ளதால் அதை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பு, வேளாண் துறை, கிராமப்புற வளர்ச்சி துறைகளில் அதிக சலுகைகள் மற்றும் அறிவிப்புக்கள் வரலாம்.

புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புக்கள் வரலாம்.

பெட்ரோல், டீசல், வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி., குறைக்கப்படலாம்.

பல வரிகள் தள்ளுபடி, வரி விகிதம் குறைப்பு, வரி சலுகைகள் போன்ற அறிவிப்புக்கள் வரலாம்.