நமக்கு வேற வழி இல்ல ஆத்தா.. மீண்டும் நம்பர் 1 கோடீஸ்வரர் ஆனார் எலான் மஸ்க்!

Su.tha Arivalagan
Jun 01, 2023,12:31 PM IST
சான் பிரான்சிஸ்கோ: ப்ளூம்பர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் டிவிட்டர் சிஇஓ எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

74 வயதாகும் எலான் மஸ்க் படு பிசியான, பரபரப்பான,  டாக் ஆப் தி வேர்ல்ட் ஆக வலம் வரும் மிகப் பெரிய மெகா கோடீஸ்வரர். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, டிவிட்டர் உலகப் பெரும் நிறுவனங்களின் தலைவராக கோலோச்சி வருபவர். போர்ப்ஸ் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் எலான் மஸ்க் தற்போது ப்ளூம்பர்க் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.



உலகின் 500 பெரும் கோடீஸ்வரர் பட்டியலை வெளியிட்டுள்ளது ப்ளூம்பர்க். அதில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் எலான் மஸ்க். இந்த ஆண்டு இதுவரை 55.3 பில்லியன் டாலருக்கும் மேல் ஈட்டியுள்ளார் எலான் மஸ்க். டெஸ்லா மூலம் கிடைத்த வருவாய்தான் இதில் அதிகமாகும்.

இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பெர்னார்ட் அர்னால்ட் தற்போது 2வது இடத்திற்குப் போய் விட்டார். இந்த ஆண்டு இந்த இருவரும் மாறி மாறி முதலிடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  லூயிஸ் வுட்டன், பென்டி, ஹென்னஸ்ஸி ஆகிய பிராண்டுகளின் நிறுவனர்தான் அர்னால்ட். லக்சரி நிறுவனத்தின் அதிபர் இவர்.

இதற்கிடையே, டிவிட்டரில் இத்தனை நாட்களாக களேபரம் செய்து கொண்டிருந்த மஸ்க், விரைவில் அதை புதியவரிடம் ஒப்படைத்து விட்டு, தனது கவனத்தை டெஸ்லா பக்கம் முழுமையாக திருப்பப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. டெஸ்லாவும் தற்போது மிகப் பெரிய லாபத்தைக் கொடுத்து வருவதால் மீண்டும்  அதில் மஸ்க் ஈடுபடவுள்ளாராம். டெஸ்லா நிறுவனமும், மஸ்க்கை பெரிய அளவில் மிஸ் செய்கிறது.

டெஸ்லா தனது புதிய சர்வதேச தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் திட்டத்தில் உள்ளது. பல்வேறு நாடுகளுக்கு இடையே இதில் போட்டியும் உள்ளது. ஆனால் அந்த புதிய தொழிற்சாலை இந்தியாவில் அமையுமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் உள்ளது. ஒரு வேளை அது இந்தியாவில் அமைக்கப்பட்டால் டெஸ்லா படைப்புகள் இந்தியர்களுக்கும் எளிதில் கிடைக்கும், டெஸ்லாவுக்கும் அது மிகப் பெரியலாபமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.