வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் உள்ளது ?

Aadmika
Feb 02, 2023,09:53 AM IST
ஒரு நாட்டின் மன்னனுக்கு சந்தேகம் ஒன்று வந்தது. திருமால் வாழ்வது வைகுண்டத்தில் என்று சொல்கிறார்களே. அப்படியானால் அந்த வைகுண்டம் பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கும் என சந்தேகம் எழுந்தது. உடனே அரசவையை கூட்டி, சபையில் இருந்த கற்றறிந்த சான்றோர்களிடம் தனது சந்தேகம் பற்றி கேட்டார்.



அனைவரும் தங்களின் அறிவுக்கு எட்டி அளவிற்கு யோசித்து பலவிதமான பதில்களை தந்தனர். ஆனால் அவர்கள் கூறிய பதில் எதுவும் மன்னனுக்கு திருப்தி அளிக்கவில்லை. இந்த சந்தேகத்திற்கு யாரிடம் பதில் கிடைக்கும் என மன்னர் உள்ளிட்ட அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். அப்போது மக்களின் கூட்டத்தில், அவை நடவடிக்கைகளை காண வந்திருந்த இளைஞன் ஒருவன், நான் பதில் சொல்கிறேன் என முன்வந்தான்.

அவனிடம் மன்னன், சொல்...வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என கேட்டார். அதற்கு அந்த இளைஞன், கூப்பிடும் தூரத்தில் தான் மன்னா உள்ளது என்றான். இந்த பதிலை கேட்டு மன்னன் உள்ளிட்ட அவையில் இருந்த அனைவருக்கும் ஆச்சரியம். மன்னர் விடாமல், "கூப்பிடும் தூரத்தில் தான் உள்ளது என எப்படி சொல்கிறாய்? உனது வார்த்தை உண்மை என எப்படி நம்புவது?" என கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன், மன்னா...குளத்தில் இருந்த யானையின் காலை முதலை கடித்தது. அப்போது அந்த யானை, "ஆதிமூலமே" என அழைத்த அடுத்த நிமிடமே அங்கு வந்து காட்சி தந்து, யானைக்கு சாப விமோசனமும் தந்து, மோட்சமும் அளித்த கதை அனைவரும் அறிவோம். அப்படி யானை கூப்பிட்ட உடனேயே திருமாலால் ஓடி வர முடிந்தது என்றால், அவர் இருக்கும் வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் தானே இருக்க வேண்டும் என்றான்.

இளைஞன் சொன்ன இந்த வார்த்தைகள் மன்னனை மகிழ்ச்சி அடைய வைத்தது. உடனடியாக அந்த இளைஞனை பாராட்டி, பரிசுகளுடன் அரச பதவியும் அளித்தார் மன்னர். 

திருமாலை ஆயிரம் நாமங்களை சொல்லி போற்றுவது விஷ்ணு சகஸ்ரநாமம் என்கிறோம். இதிலுள்ள ஒவ்வொரு நாமமுமே மகிமை வாய்ந்தது. ஒவ்வொரு பலனை தரக்கூடியது. அவற்றில் ஆதிமூலம், கேசவன் என்னும் நாமங்களை சொல்லி அழைத்தால் பெருமாள் நம்மை காக்க ஓடோடி வருவார். கோவிந்தா என்னும் நாமம் பாவங்களை போக்கி, பசு தானம் செய்த பலனை கொடுக்கக் கூடியது என வேதங்கள் சொல்கின்றன.