Beach to Chepauk: ஜனவரி மாதம் வரை பறக்கும் ரயில் சேவை ரத்து!
Jun 01, 2023,12:28 PM IST
சென்னை : சென்னையில் ஜூலை 01 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரையிலான 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் 4வது வழித்தட ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதேசமயம், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகப்படுத்தவும் திட்டமிட்டு 1985 ம் ஆண்டு முதல் ரயில்வே விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே சுமார் ரூ.500 கோடியில் 3வது கட்டமாக நடந்த வந்து பறக்கும் ரயில் சேவைக்கான பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
தற்போது இந்த பிரச்சவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் பறக்கும் ரயில் திட்ட பணிகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இந்த பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஏற்கனவே முடிந்து விட்டது. இந்நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.