பக்ரீத், தொடர் விடுமுறை.. 800 சிறப்புப் பேருந்துகள் .. ஹேப்பியா ஊருக்குப் போய்ட்டு வாங்க!
Jun 28, 2023,09:48 AM IST
சென்னை: பக்ரீத் பண்டிகையும் அதைத் தொடர்ந்து விடுமுறைகளும் வருவதால் மக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலிருந்து மொத்தம் 800 பேருந்துகள் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக அரசு விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் தான் வேலை நாள். அடுத்து சனி, ஞாயிறு வருகிறது. வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்தால், நான்கு நாட்கள் லீவு கிடைக்கும். எனவே மக்கள் பல்வேறு ஊர்களுக்கும் செல்லும் திட்டத்தில் உள்ளனர்.
நான்கு நாட்கள் என்பது ஒரு குட்டி டூர் போக சரியான காலம் என்பதால் பலரும் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் கிளம்புகின்றனர்.இதனால் பயணிகள் வசதிக்காக சிறப்புப் பேருத்துகளை இயக்க விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவெடுத்து இன்று முதல் அந்த சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.