தொண்டர்கள் எண்ணிக்கையில் எது பெரிய கட்சி தெரியுமா?

sahana
Jun 26, 2023,04:12 PM IST
டெல்லி: உலகத்திலேயே அதிக தொண்டர்கள் கொண்ட கட்சி பட்டியலில் பா.ஜ.க., முதல் இடத்தையும், அ.தி.மு.க., 7வது இடத்தையும் பிடித்துள்ளன.

உலகிலேயே அதிக அரசியல் கட்சிகள் கொண்ட நாடு என்றால் அது இந்தியா தான் என பெரும்பாலானவர்களுக்கு தெரியும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியாவில் அவ்வளவு கட்சிகள் இருப்பது ஆச்சரியமில்லை. ஆனால், ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் தொண்டர்களை வைத்துதான் அது பெரிய கட்சியா, சிறிய கட்சியா என்பதை வகைப்படுத்த முடியும். 



சில நாடுகளில் கட்சியின் சொத்து மதிப்பை பொறுத்து வகைப்படுத்தலாம். ஆனால், இந்தியாவில் தொண்டர்களே கட்சியின் தூண்களாக பார்க்கப்படுகின்றன. தொண்டர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அக்கட்சிக்கு கிடைக்கும் ஓட்டு மதிப்பும் அமைகிறது. கட்சி தொண்டர்களின் ஓட்டுகள் பெரிய வித்தியாசத்தில் மாறாது என்பதால், வெற்றி வாய்ப்பு கூட இதனை வைத்து சில நேரங்களில் அறிய முடியும். 

இந்நிலையில் தொண்டர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய கட்சி எது என வேர்ல்டு அப்டேட் (புள்ளியியல்) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் முதல் 15 இடங்களில் 5 இந்திய அரசியல் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 



அதில், அதிக தொண்டர்களை கொண்ட கட்சியாக பா.ஜ.க., முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில், காங்கிரஸ் 4வது இடத்திலும், அ.தி.மு.க., 7வது இடத்திலும் (எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிராஸ்பரஸ் கட்சியும் இதே 7வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது), ஆம்ஆத்மி கட்சி 9வது இடத்திலும், தெலுங்கு தேசம் கட்சி 14வது இடத்திலும் உள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சி 2வது இடத்தையும், அமெரிக்காவின் ஜனநாயக கட்சி 3வது இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில் திமுக  உள்ளிட்ட பல கட்சிகளுக்கு இடம் கிடைக்கவில்லை.