பாஜக.,வால் என்னை தடுக்க முடியாது...வயநாட்டில் தெறிக்க விட்ட ராகுல் காந்தி
வயநாடு : என்னுடைய எம்.பி., பதவியை தான் பறிக்க முடியும். பாஜக.,வால் என்னை ஒரு போதும் தடுக்க முடியாது என வயநாட்டில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அவதூறு வழக்கில் சூரத் கோர்ட் வழங்கி இரண்டு ஆண்டு சிறை தண்டனை காரணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் லோக்சபா எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக லோக்சபா செயலகம் அறிவித்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு கேரளாவில் உள்ள தனது வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி முதன் முறையாக சென்றார். உடன் அவரது சகோதரி பிரியங்காவும் சென்றார்.
வாய்மையே வெல்லும் என்ற முழக்கத்துடன் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட ராகுல் காந்திக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு வரவேற்பு அளித்தனர். கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். வயநாடு தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல், எம்.பி., என்பது வெறும் அடையாளம் அல்லது பட்டம் அல்லது பதவி தான். அது வெறும் பதவி தான். என்னுடைய பட்டம், பதவியை தான் பாஜக.,வால் பறிக்க முடியும்.
அவர்கள் என்னை வீட்டில் இருக்க வைக்கலாம் அல்லது சிறையில் அடைக்கலாம். ஆனால் வயநாடு மக்களின் பிரதிநிதியாக நான் இருப்பதை அவர்களால் தடுக்க முடியாது. கடந்த சில வருடங்களாக பாஜக.,விற்கு எதிராக நான் அமைதியாக போராடி வருகிறேன். பல ஆண்டுகளாக அவர்களின் எதிரி யார் என்பது தெரியாமலேயே அவர்கள் இருப்பது எனக்கு ஆச்சரியர் அளிக்கிறது. என் வீட்டிற்கு போலீஸ் அனுப்பினால் நான் பயந்து விடுவேன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னை வீட்டில் இருந்து வெளியேற்றியது எனக்கு மகிழ்ச்சி தான். தகுதிநீக்கம் செய்யப்பட்டதை மிகப் பெரிய பரிசாக நான் கருதுகிறேன். வயநாட்டில் வெள்ளம் ஏற்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, வெளியேறினர். வெள்ளத்தை எப்படி எதிர்கொள்வது என்பது முதன் முதலில் வயநாட்டில் தான் நான் பார்த்தேன். நான் உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். என்னுடைய வீட்டை ஒரு முறை அல்ல 50 முறை எடுத்துக் கொண்டாலும் நான் அதை பற்றி கவலைபட மாட்டேன்.
ஆனால் இந்திய மக்கள் மற்றும் வயநாடு மக்களுக்கு ஆதரவாக நான் குரல் கொடுப்பதை ஒரு போதும் நிறுத்த மாட்டேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தது உங்களின் எம்பி ஆவதற்காக. ஆனால் இப்போது நடக்கும் பிரச்சாரம் முற்றிலும் மாறுபட்டது. உங்கள் நண்பன், உங்கள் மகனாக வந்துள்ளேன். பாஜக மக்களை பிரித்து வைத்துள்ளது. அதானிக்கும் மோடிக்கும் என்ன உறவு என்பதை அவர் விளக்குவாரா? அதானிக்கு ஆதரவாக மோடி செயல்படுகிறார். இதை நான் கேள்வி கேட்டதால் என்னை வெளியேற்றி உள்ளனர் என்றார்.