"மோடிதான் பாஸ்".. ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்.. சிட்னியைக் கலக்கிய நரேந்திர மோடி!
May 23, 2023,03:14 PM IST
சிட்னி: சிட்னியில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான கூட்டத்தில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ், பிரதமர் நரேந்திர மோடியை பாஸ் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
சிட்னி சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அங்கு நடைபெற்ற இந்தியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார். அங்குள்ளகுடோஸ் பாங்க் ஏரினா அரங்கில் 20,000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த கூட்டத்தில் மோடி பேசினார். அவருடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனீஸும் கலந்து கொண்டார்.
தொடக்க உரையாற்றிய ஆல்பனீஸ் கூறுகையில், இதே அரங்கில் கடைசியாக ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அவரை எல்லோரும் பாஸ் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் அவருக்குக் கூட இப்படி ஒரு கூட்டம் கூடவில்லை. அப்போது கூடியதை விட இப்போது மிகப் பெரிய உற்சாகத்துடன் நீங்கள் கூடியுள்ளீர்கள். மோடிதான் இங்கு பாஸ்! என்றார் ஆல்பனீஸ்.
முன்னதாக மோடியும், ஆல்பனீஸும் கூட்ட அரங்குக்கு வந்தபோது இந்தியர்கள் பெரும் உற்சாகத்துடன் இருவரையும் வரவேற்றனர். இந்திய கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பாரம்பரியமான முறையில் இரு பிரதமர்களும் வரவேற்கப்பட்டனர்.