பாஜக கொண்டு வந்த திட்டங்கள் சரியில்லாவிட்டால் தூக்கி எறியப்படும்.. கர்நாடக அமைச்சர்!
Jun 07, 2023,10:23 AM IST
டெல்லி: கர்நாடகத்தில் ஆட்சி புரிந்த பாஜக அரசு கொண்டு வந்த சட்டங்கள், திட்டங்கள், மக்களுக்கு பயன் உள்ளதாக இல்லாவிட்டால், அவை நீக்கப்படும் என்று கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.
இதுதொடர்பாக என்டிடிவிக்கு பிரியங்க் கார்கே ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்ட பசு வதைத் தடுப்புச் சட்டம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் குந்தகமாக அமைந்து விட்டது. இதனால் மாநிலத்தின் மீது பெரும் நிதிச்சுமை இறங்க வழி வகுத்து விட்டது.
பசு வதைச் சட்டம் மட்டுமல்லாமல், ஹிஜாப் தடை என எதுவாக இருந்தாலும், அது மக்களுக்கும், சமூக வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவாததாக இருந்தால் நிச்சயம் நீக்கப்படும். காங்கிரஸ் ஆட்சி, பொருளாதாரத்தை மட்டுமே பார்க்கிறது. இதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை.
நாக்பூரில் உள்ள தங்களது முதலாளிகளை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது பசுவதைத் தடுப்புச் சட்டம். அது கால்நடை விவசாயிகளையோ அல்லது தொழில்துறையினரையோ எந்த வகையிலும் திருப்திப்படுத்தவில்லை. அவர்களுக்கு இதனால் எந்த லாபமும் கிடைக்கவும் இல்லை.