அண்ணாமலை சர்ச்சை பேச்சு.. ஆவேசத்தில் அதிமுக.. சிக்கலில் பாஜக கூட்டணி!
Jun 13, 2023,10:03 AM IST
சென்னை : தமிழகத்தில் பாஜக.,வுக்கு இருந்த ஒரே கூட்டணியான அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் சர்ச்சை பேச்சால் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக மற்றும் அதிமுக பற்றி அடிக்கடி ஏதாவது விமர்சனங்களை முன்வைத்து பரபரப்பை கிளப்பி வருவது வழக்கமாக உள்ளது. இருந்தும் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி தொடர்ந்து நீடித்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலலிதா வருானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார். இந்த வழக்கில் அவரது நெருங்கிய தோழி உள்ளிட்ட பலரும் சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். ஆனால் அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே ஜெயலலிதா உயிரிழந்து விட்டார்.
ஜெயலலிதா உயிரிழந்ததால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நீர்த்துப் போனது. கர்நாடக ஐகோர்ட் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி, வழக்கை முடித்தது. இல்லை என்றால் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என அண்ணாமலை பேசினார். அண்ணாமலையின் இந்த பேச்சிற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கும் தகுதி அண்ணாமலைக்கு கிடையாது. என்ன பேசுகிறோம் என தெரிந்து கொண்டு அவர் பேச வேண்டும். பாஜக - அதிமுக கூட்டணி தொடர்வதையோ, மோடி மீண்டும் பிரதமர் ஆவதையோ அவர் விரும்பவில்லையோ சந்தேகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.