ஒன்னும் பண்ண முடியாது.. 2024 லிலும் மோடி தான் பிரதமர்.. அமித் ஷா ஆருடம்

Aadmika
May 26, 2023,10:07 AM IST
கவுகாத்தி : 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமராக உள்ளார். காங்கிரசிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

டில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பார்லிமென்ட் கட்டிடம் மே 28 ம் தேதி திறக்கப்பட உள்ளது. ஆனால் இவ்விழாவிற்கு ஜனாதிபதி அழைக்கப்படாததை காரணமாக கூறி இவ்விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. நவீன் பட்நாயக்கில் பிஜூ ஜனதா தளம் மட்டும் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.



இந்நிலையில் கவுகாத்தியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எதிர்மறையான செயல்களையே செய்த வருகிறது. புதிய பார்லிமென்ட் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக அறிவித்து இதிலும் அரசியல் செய்கிறது. 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று நரேந்திர மோடியே பிரதமாவார். 300 க்கும் அதிகமான சீட்களை பிடித்து மீண்டும் அவர் பிரதமராக உள்ளார்.

காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழக்கும். லோக்சபாவில் தற்போதுள்ள சீட்டுக்களை கூட அவர்களால் தக்கவைத்து கொள்ள முடியாமல் போகும். பிரதமர் திறப்பதால் பார்லிமென்ட் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது காங்கிரஸ். ஆனால் அதற்கு ஜனாதிபதியை காரணமாக சொல்கிறது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் புதிய சட்டசபை கட்டிடங்களுக்கு அம்மாநில முதல்வர்கள் தான் அடிக்கல் நாட்டுகிறார்கள். சோனியாவோ, ராகுலோ அல்லது அந்த மாநிலங்களின் கவர்னர்களோ அடிக்கல் நாட்டவில்லையே.

பார்லிமென்ட்டிற்குள் பிரதமர் பேசுவதற்கு காங்கிரஸ் அனுமதிப்பதே இல்லை. ஆனால் இந்திய மக்கள் மோடி பேசுவது அவசியம் என நினைக்கிறார்கள். பிரதமரை அவமதிப்பது நாட்டு மக்களை அவமதிப்பதற்கு சமம் என்றார்.

2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலுலின் போது, அடுத்த தேர்தலுக்கு முன் அசாமில் ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு உள்ளாகவே 86,000 வேலைகள் அளித்தது. அடுத்த 6 மாதங்களுக்குள் மீதமுள்ள வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.