இது செம ட்விஸ்டா இருக்கே.. திமுக, பாஜக.,வுக்கு குட்பை.. அதிமுகவில் இணைந்தார் டாக்டர் சரவணன்

Aadmika
Jan 04, 2023,12:06 PM IST

சென்னை: தேர்தல் சமயத்தில் கட்சி மாறுவது, கேட்ட பதவி கிடைக்கவில்லை என்ற வேறு கட்சி தாவி விடுவது என்பது எல்லாம் அரசியலில் ஒன்றும் புதியது கிடையாது. அதே போல் ஒரு கட்சியில் இருந்து விலகி, மற்றொரு கட்சியில் இணைந்த பிறகு அந்த கட்சியை விமர்சிப்பதும், பிறகு தாய் கட்சியிலேயே மீண்டும் இணைவதும் புதியது கிடையாது.


இருந்தால் அரசியலுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே ஒரே கட்சியில் இருந்து மூன்று முறை விலகி, பிறகு மீண்டும் அதே கட்சிக்கு திரும்ப வந்த புதிய வரலாற்று சாதனையை படைத்தவர் டாக்டர் சரவணன். அரசியலில் புதிய டிரெண்ட், புதிய ஸ்டையிலை உருக்கி, "யாருய்யா இவரு" என அனைவரையும் கேட்க வைத்தவர் தான் இந்த சரவணன். 




பணம் வாங்காமல் தனது மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்த்து, மதுரையில் பிரபலமானவர் தான் இந்த டாக்டர் சரவணன். மதிமுக.,வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை துவக்கியவர், சினிமாவிலும் நுழைந்து அகிலன் என்ற படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். பணத்தை வாரி இரைத்தும் அந்த படம் பேசப்படாததால் மீண்டும் அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.

திமுக, மதிமுக, பாஜகவில் இருந்தவர் டாக்டர் சரவணன். இவர் திமுகவில் இருந்தபோது திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அதிமுக வேட்பாளரின் வேட்பு மனுவில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதாவின் கைரேகை குறித்து சர்ச்சை எழுப்பி பரபரப்பை கிளப்பியவர். பின்னர் திமுக.,வில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து செயல்பட்டார். மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக எழுந்த பெரும் சர்ச்சையைத் தொடர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டு, அன்று மாலையே பாஜக கட்சியை விட்டு விலகினார். 

திமுக, பாஜக ஆகிய கட்சிகளில் மூன்று முறை விலகி, பிறகு சிறிது நாட்களிலேயே அதே கட்சிகளில் இணைந்தவர். சமீபத்தில் பாஜக.,வை விட்டு விலகியதால் மீண்டும் திமுகவில் தான் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்ஸை சந்தித்து கட்சியில் இணைந்ததாக டாக்டர் சரவணன் அறிவித்துள்ளார்.

இருந்தாலும் இந்த கட்சியிலானது நிரந்தரமாக இருப்பாரா? இந்த கட்சியில் எத்தனை காலமோ? இந்த கட்சியில் இருந்தும் விலகினால் அடுத்தாக எந்த கட்சிக்கு போவார்? என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும். இதை வைத்து சமூக வலைதளங்களில் கணக்கில்லாமல் மீம்கள் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.