"கூட்டணி".. ஆரம்பத்திலிருந்தே நாங்க அதைத்தான் சொல்லிட்டிருக்கோம்.. ஈபிஎஸ் அதிரடி!

Aadmika
Mar 30, 2023,04:38 PM IST
சென்னை : அதிமுக, பாஜக கூட்டணி இல்லை என நாங்கள் சொல்லவே இல்லை. இருக்கிறது என்றுதான் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்துள்ள பேட்டி தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது. 

ஈரோடு சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் சரமாறியாக பல குற்றச்சாட்டுக்களை கூறியதுடன், அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது, நாவடக்கம் வேண்டும் என்பது போன்ற பல காரசாரமான வார்த்தைகளையும் முன் வைத்தனர். இதற்கு பதிலடியாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜக.,வினரும் அதிமுக நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டி வந்தனர். இதனால் அதிமுக, பாஜக கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது என தமிழக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது.



அடுத்த வரும் லோக்சபா தேர்தல், தமிழக  சட்டசபை தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாகவும், தனித்து போட்டியிட்டால் பாஜக.,வின் நிலை என்ன ஆகும் என்றெல்லாம் பலவிதமான பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் அடிபட்டன. பாஜக, அதிமுக கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பமே பலருக்கு வந்து விட்டது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக யாருடனும் கூட்டணி அமைக்காமல் பாஜக தனித்துப் போட்டியிடும். கூட்டணி வைத்தால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறி அதிர வைத்தார் அண்ணாமலை. இதற்கு பாஜகவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் கட்சித் தலைமைதான் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என்று பல்டி அடித்தார் அண்ணாமலை.

இந்நிலையில் நேற்று ஆங்கில டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றார். இது தொடர்பாக இன்று சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது. கூட்டணியில் இல்லை என நாங்கள் எப்போது சொன்னோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இணைந்து தான் போட்டியிட்டோம். இனி வரப்போகும் லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் அனைத்திலும் கூட்டணியுடன் தான் செயல்பட உள்ளோம் என்றார்.

இதை கேட்ட நெட்டிசன்கள், நேற்று அமித்ஷாவே சொல்லி விட்டார் என்றால் இன்று அதிமுக என இல்லை என மறுத்தா சொல்ல போகிறது. நேற்று அமித்ஷா சொன்னதை இன்று அதிமுக அப்படியே திருப்பி சொல்கிறது என கிண்டல் செய்து வருகின்றனர்.