தனுஷ் பட ஷூட்டிங்கிற்கு அனுமதி அளித்தவர்கள் மீது நடவடிக்கை...அமைச்சர் அதிரடி
சென்னை : தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்திற்கு ஷூட்டிங் நடத்த அனுமதி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதனால் தனுஷ் படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
டைரக்டர் அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தென்காசி மாவட்டம் மத்தளம்பாளை அருகே நடந்து வந்தது. முறையாக அனுமதி பெறாமல் இப்பகுதியில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள்கள் எழுந்தது வந்தது.
இதனால் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பிறகு சிறிது நாட்களில் மீண்டும் ஷூட்டிங் துவங்கப்பட்டது. அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையின் அனுமதி பெறாமல் ஷூட்டிங் நடத்தப்பட்டதாக கூறி ஷூட்டிங் நடத்த மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்தார்.
பிறகு சம்பந்தப்பட்ட துறைகள், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மீண்டும் ஷூட்டிங் துவங்கப்பட்டது. இருந்தும் கேட்பன் மில்லர் ஷூட்டிங் பற்றி தொடர்ந்து பல விதமான புகார்கள் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இது பற்றி அமைச்சர் துரைமுருகனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நீர் நிலைகளை ஆக்கிரமித்து தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. யார் இந்த அனுமதியை கொடுத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க திட்டம் தயார் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனால் கேப்டன் மில்லர் படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. போகிற போக்கை பார்த்தால் இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு நிரந்தரமாக தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே தகவல்கள் பரவி வருகின்றன.