பிரதமரை விமர்சிப்பது அவதூறானது.. ஆனால் தேச துரோகம் அல்ல.. கர்நாடக உயர்நீதிமன்றம்

Su.tha Arivalagan
Jul 07, 2023,12:19 PM IST
பெங்களூரு: பிரதமரை அவமதித்துப் பேசுவது என்பது அவதூறானது, பொறுப்பற்ற செயலாகும். அதேசமயம், இதை தேச துரோக செயலாக கருத முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பீதர் நகரில் உள்ள ஷாஹீன் பள்ளி நிர்வாகிகளான அலாவுதீன், அப்துல் காலிக், முகம்மது பிலால் இனாம்தார் மற்றும் முகம்மது மெஹதாப் ஆகியோர் மீது பீதர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் பதியப்பட்டது.  அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதக் குழுக்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்த முயன்றதாக தேச துரோக பிரிவும் ஒன்றாகும்.



இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தின் காலபர்கி பெஞ்ச்சில் குற்றம் சாட்டப்பட்டோர் மனு செய்தனர். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர் குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போதுதான் மேற்கண்ட கருத்தை நீதிபதி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி பள்ளி மாணவர்கள் நாடகம் ஒன்றை நடத்தினர். அதில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.  பிரதமர் நரேந்திர மோடியையும் அவர்கள் விமர்சித்துப் பேசியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நால்வர் மீதும்  ஏபிவி அமைப்பைச் சேர்ந்த நிலேஷ் ரக்ஷாலா என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் அவர்கள் மீது அவதூறு செய்தல், தேச துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி சந்தன்கவுடர் தீர்ப்பளித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பிரதமரை  செருப்பால் அடிப்பேன் என்று  கூறுவது அவதூறானது மட்டுமல்ல, பொறுப்பற்ற பேச்சுமாகும்.  ஒரு அரசை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பதை சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அரசியல்சாசனத்தைக் காக்கும் பொறுப்பில் உள்ளவர்களை ஒரு கொள்கை முடிவுக்காக அவதூறாக விமர்சிப்பதை சட்டம் அனுமதிக்காது.

இந்த நாடகமானது பள்ளிக்குள்தான் நடந்துள்ளது. அதில் நடித்தவர்களும் சரி, அதை ஏற்பாடு செய்தவர்களும் சரி  மக்களிடையே வன்முறையைத் தூண்டும் நோக்கிலோ அல்லது பொது அமைதியைக் குலைக்கும் வகையிலோ நடத்தியதாக நிரூபிக்கப்படவில்லை. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டதால்தான் இதுகுறித்தே தெரிய வந்துள்ளது. எனவே  மக்களிடையே குழப்பத்தையும், பிரிவினையையும்,  கலவரத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த நாடகம் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது. எனவே இந்த வழக்கில் தேச துரோக பிரிவு பொருந்தாது.

பள்ளிகளில் நடத்தப்படும் நாடகங்கள் அரசியல் சார்பற்றவையாக இருக்க வேண்டும். மாணவர்களின் கிரியேட்டிவ் திறமையை ஊக்குவிக்கும் வகையிலானதாக இருக்க வேண்டும். அவர்களது கல்வி சார்ந்ததாக இருக்க வேண்டும். விழிப்புணர்வு ஊட்டும் வகையிலானதாக இருக்க வேண்டும். அவர்களது நாடகங்களில் அரசியலைப் புகுத்தக் கூடாது. அரசுகளை விமர்சிக்கக் கூடாது. இது இளம் உள்ளங்களைப் பாழ்படுத்தி விடும். அவர்களுக்கு புகட்டப்பட வேண்டியது - அறிவு, தொழில்நுட்ப ஞானம் உள்ளிட்டவைதான் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.