மூலையில் முடங்கிப் போன.. மலர்த் தோட்டம்!

Su.tha Arivalagan
May 31, 2023,02:54 PM IST
- கவிஞர் சீதாலட்சுமி

ஊர் எல்லை கழனியில் களையெடுக்கும் 
மூவெட்டு அகவைக்காரி அவள்....!!

வயம் பார்த்து காதல் கொள்ளவில்லை அவன்
கள்ளங்கபடமற்ற 
அகம் பார்த்தே  காதல் கொண்டான்......!!



பட்டாம்பூச்சியாக பறந்து 
திரிந்தவள்
தாலியின் வேலிக்குள் அடைபட்டாள்
முக்கனிகளாக மூன்று குழவி ஈன்றாள்..!!

ஆனந்தச் சோனையில் 
நித்தமும் நீந்தித் திளைத்தனர் வாழ்க்கையில்!
நிம்மதியான இல்லற சாகரத்தில்
திடீரென விழுந்த இடியாக
எங்கிருந்தோ வந்தாள் ஒருத்தி
அவனின் மன���ில் அடைமழையாய் அப்பிக் கொண்டாள்
அவன் உள்ளம் நுழைந்து அன்பைபொழிந்தாள்..!!

நெஞ்சம் மயங்கிய மணவாளன்
கட்டிய கோமகளை விட்டு  விலகினான்
மின்னல் தாக்கிய மரமாய் எரிந்து போனது முன்னவள் வாழ்க்கை!

வேகமாய்.. பிரவேசித்தவளின் மோகமும் ஆசையும்
நாட்கள் தேயத் தேய 
தீயத் தொடங்கி
மொத்தமாய் தீர்ந்தது ஓர் நாள்
வேஷம் புரிந்து எல்லாம் விஷமாய் மாறியபோது
விதிர்த்துப் போனான் நம்பி நின்றவன்

தான் செய்த துரோகமும்
தான் கலைத்த கூடும்
கலைந்து போன கனவுகளும்
மறைந்து போன மனவாட்டியும்
உள்ளத்தை உலுக்கியெடுக்க
முகம் விழிக்க வெட்கி
சித்தம் சிதைந்து சென்றான் 
மண்ணை விட்டு பிராயச்சித்தம்  தேடி!!
நம்பி வந்தவள்.. எல்லாம் போய்
கையறு நிலையில் கைம் பெண்ணாய்
மூலையில் முடங்கிப் போனது ஒரு மலர்த் தோட்டம்.. மணம் இழந்து!