என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுப் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மாநாடு தொடர்பான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
85 ஏக்கர் பரப்பளவில் மாநாடு
சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டிற்கான பணிகள் நடந்து வருகின்றன. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை கடந்த 4ம் தேதி அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு பந்தல்கால் ஊன்றப்பட்டது முதல் மாநாடு முடியும் வரை ராணுவ கட்டுப்பாட்டோடு இயங்க வேண்டும் எனவும், நம்மைப் பற்றி நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும் என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் இருந்து கண்காணித்து வருகிறார். மாநாட்டு பணிகளை துபாயை சேர்ந்த விவிஐடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது தவெக.
மக்கள் அமர இருக்கைகள்
மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் பொதுமக்களை மண்டல வாரியாக அமர வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடம் மற்றும் பார்க்கிங் ஏரியாவும் தனித்தனி என்றாலும் அனைத்து இடங்களிலும் 500க்கும் மேற்பட்ட சிசிடி கேமிரா பொறுத்தப்பட உள்ளது.
மாநாடு நடத்த சுமார் 120க்கு 70 அடி என்ற பரப்பளவில் மாநாட்டு மேடை அமைக்கப்பட உள்ளது. அது மட்டும் இன்றி சுமார் 50,000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. மாநாட்டு மேடை முழுவதையும் விஜய் சுற்றி வரும் வகையில் ராம்ப் வாக் அமைக்கப்பட இருக்கிறது.
விஜய் நடந்து வருவதற்கு ராம்ப்
இதில் விஜய் மாநாட்டு நுழைவாயிலிலிருந்து மேடை வரைக்கும் தொண்டர்கள் மத்தியில் நடந்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமான ராம்ப் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தக் கட்சி மாநாட்டிலும் இதுபோன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது மழைக் காலம் என்பதால், மாநாடு நடைபெறும் போது மழை வந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தரையில் இருந்து சுமார் ஒரு அடி உயரத்திற்கு மேல் பலகைகள் அமைக்கப்பட்டு அதன் மேல் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.
மாநாட்டில் நுழைய ஐந்து வழித்தடங்களும், வெளியேற 15 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் குடிநீர் வசதிகள் அமைக்கப்பட உள்ளது. மாநாட்டின் போது யாருக்கேனும் மருத்துவ வசதி தேவைப்பட்டால், களத்தில் இருக்கும் 150 மேற்பட்ட மருத்துவர்களை அணுகி மருத்துவம் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போனால் கண்டுபிடிக்க தனி டீம்
உடன் வந்தவர்கள் யாரும் காணவில்லை என்றால், அவர்களை கண்டுபிடித்து கொடுக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் என யாரும் பாதிக்காத வண்ணம் கழிவரை வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடம் முழுவதும் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு அனைத்து இடங்களும் கண்காணிக்கப்பட உள்ளன. யாரும் வேண்டும் என்றே பிரச்சனைகள் செய்தாலும் கண்காணிக்கப்படும் அளவிற்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும் இருப்பவர்கள் பார்க்கும் வண்ணம் ஆங்காங்கே எல்இடி திரை அமைக்கப்பட இருக்கிறது. மருத்துவ குழு, பாதுகாப்பு குழு, ஆம்புலஸ் குழு, தீயனைப்பு குழு என அனைத்து குழுக்களுக்கும் தனித்தனி யூனிபார்ம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வருபவர்கள் மாநாடு முடிந்து வெளியில் செல்லும் போது அவசரம் கொள்ளாமல் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
500க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
கடந்த 20 நாட்களுக்கு மேலாக, 500க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மாநாட்டு தோரணங்கள், பூ அலங்காரங்கள் ஆகிய பணிகள் மட்டுமே மீதம் உள்ளதாகவும், அதுவும் விரைவில் முடிந்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டு பகுதிக்கு பொதுமக்கள், காவல் துறையினர், தீயணைப்புதுறையினர்கள் அடிக்கடி வந்து செல்வதனால் அங்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால், மாநாடு தொடங்கும் முதல் நாள் வரை இந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்