2013ல் சென்னை மெட்ரோ.. 9.11 கோடி பேர் பயணித்துள்ளனர்.. சிஎம்ஆர்எல் நிறுவனம் அறிவிப்பு
சென்னை: 2023ம் ஆண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 9.11 கோடியாக இருந்தது என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய புதிதில் பெரிதாக வரவேற்பு இல்லை. கூட்டமே இல்லாமல்தான் ரயில்கள் ஓடின, ரயில் நிலையங்களிலும் கூட்டம் பெரிதாக இல்லை. ஆனால் அதன் பின்னர் மெல்ல மெல்ல மெட்ரோவுக்கு மவுசு அதிகரித்து, இன்று மெட்ரோ இல்லாவிட்டால் சென்னையே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது.
பெரும்பாலானோர் மெட்ரோ ரயில் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் சாலைப் போக்குவரத்தில், வாகன நெரிசல் அதிகரித்து விட்டது. இதில் இருந்து தப்பிக்க அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டில் 2023ல் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலை பயன்படுத்தியுள்ளனர் என்று மெட்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு 6.09 கோடி பேர் பயணம் செய்த நிலையில், அதை விட 2023ம் ஆண்டு இது கிடுகிடுவென அதிகரித்து விட்டது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு இதுவரை இல்லாத அளவிற்கு 2023 ஆம் ஆண்டில் 9.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு 6.9 கோடி பேர் பயணம் செய்துள்ளார்கள். 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள் .
சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயிலில் சேவை தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023 ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகம்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யூ ஆர் குறியீடு, பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ் அப் டிக்கெட், பேடிஎம் மற்றும் போன் பே போன்ற அனைத்து வகையாக பயண சீட்டுகளுக்கும் 20% கட்டண தள்ளுபடி வழங்குகிறது. மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் ஏழு நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக பல்வேறு மாறுதல்களையும் ஏற்படுத்தி வருகின்றனர் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர்.