5 பிள்ளைகளும் கண்டுக்கலை.. ரூ. 1.5 கோடி சொத்துக்களை அரசுக்கு எழுதி வைத்த தாத்தா!

Su.tha Arivalagan
Mar 06, 2023,04:34 PM IST
முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தில் 85 வயதான முதியவர் ஒருவர் தனது ரூ. 1. 5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மாநில அரசுக்கு எழுதி வைத்து விட்டார். அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனராம். யாரும் அவரைக் கண்டு கொள்ளாததால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த பெரியவர்.



முசாபர் நகரைச் சேர்ந்தவர் நாதுசிங். இவருக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் கல்யாணமாகி விட்டது. மகன் சஹரன்பூரில் ஆசிரியராக இருக்கிறார். நாதுசிங்குக்குச் சொந்தமாக ரூ. 1.5 கோடி  மதிப்புள்ள  வீடும், நிலமும் உள்ளது. 

இந்த நிலையில் தனது சொத்துக்களை அரசுக்கு எழுதி வைத்துள்ளார் நாது சிங். தனது உடலையும் மருத்துவக் கல்லூரிக்கு தானம் தருவதாக எழுதிக் கொடுத்து விட்டார். தான் இறந்த பிறகு தனது இறுதிச் சடங்கில் தனது பிள்ளைகள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் எழுதி வைத்துள்ளார்.

நாதுசிங்கின் மனைவி இறந்த பிறகு, அவரை அவரது பிள்ளைகள் கவனிக்கவில்லையாம். இதனால் தனிமையில்தான் வசித்து வருகிறார் நாது சிங்.  தற்போது முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார் இந்த பெரியவர். இத்தனை பிள்ளைகள் இருந்தும் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று வருத்தத்தில் இருந்து வருகிறார் நாது சிங். இதனால்தான் சொத்துக்களை அரசுக்கே எழுதிக் கொடுத்து விட்டார். அங்கு தனது மறைவுக்குப் பின்னர் பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ கட்டிக் கொள்ளட்டும் என்றும் கூறியுள்ளார் நாது சிங்.

கடந்த ஆறு மாதமாக முதியோர் இல்லத்தில் நாது சிங் வசித்து வருகிறார். இதுவரை அவரது பிள்ளைகள் யாரும் அவரை வந்து பார்க்கவில்லையாம். இதனால்தான் அவர் மனம் வெறுத்துப் போய் விட்டாராம்.