74வது குடியரசு தின விழா : டில்லி ராஜ்பாத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
Jan 26, 2023,09:58 AM IST
டில்லி : நாட்டின் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டில்லியில் உள்ள ராஜபாத்தில் ஜனாதிபதி திரெளபதி மும்மு தேசியக் கொடியை ஏற்றினார். இவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் குடியரசு தினம் இதுவாகும்.
காலை 8 மணிக்கு துவங்கிய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி கலந்து கொண்டுள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.
குடியரசு தின அணிவகுப்புக்கள் ராஜ்பாத் துவங்கி இந்தியா கேட் வரை நடைபெற்றன. குடியரசு தின அணிவகுப்புக்கள் காலை 10.30 மணிக்கு துவங்கி பகல் 12 வரை நடைபெற்றன. இந்த ஆண்டு இந்திய கலாச்சாரம், வீரதீர செயல்கள், ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் குடியரசு தின அணிவகுப்புக்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி திரெளபதி மும்மு, சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.