கொட்டி தீர்க்கும் கன மழை.. இன்று 7 மாவட்டங்களில் வாய்ப்பு.. சென்னையில் விட்டு விட்டு!

Su.tha Arivalagan
Nov 25, 2023,11:00 AM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மழை நீடிக்கும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து ,கிழக்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.


தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும், அது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ,தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.




இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு விட்டு விட்டு கன மழை கொட்டித் தீர்த்தது.


இன்று மழை  நிலவரம்:


கடலூர் , நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம்.


சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதலிலேயே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்றும் காலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தொடர் மழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும்  மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தனர்.