கன மழை எதிரொலி... 1 அல்ல 2 அல்ல... 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
Dec 09, 2023,10:54 AM IST
திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ள 7 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஏற்கனவே இந்த வாரம் முழுவதும் மழை விடுமுறை நீடித்து வரும் நிலையில் இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கும் இன்று கன மழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசான மற்றும் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. கோவையில் 100 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்துள்ளது.
ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பள்ளிகள் கடந்த திங்கள்கிழமை முதலே மூடப்பட்டுள்ளது. திங்கள்கிழமைதான் இவை திறக்கப்படவுள்ளன.
இந்த நான்கு மாவட்டங்களில் நிலைமை இன்னும் சீராகாத காரணத்தினால் தொடர் விடுமுறையில் அவை உள்ளன. தண்ணீர் வடிவதில் காலதாமதம் மற்றும் பள்ளிகளில் பராமரிப்பு பணி உள்ளிட்ட காரணங்களுக்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.