69வது தேசிய திரைப்பட விருதுகள்.. அல்லு அர்ஜூன் சிறந்த நடிகர்.. ஆர்ஆர்ஆர் படத்துக்கு 5 விருதுகள்!
Aug 24, 2023,06:46 PM IST
டெல்லி: 69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. அதில் திரைப்படம் அல்லாத பிரிவில், கருவறை என்ற குறும்படத்திற்கு இசையமத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு விருது கிடைத்தது. அதேபோல தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டது. கடைசி விவசாயி படத்தில் நடித்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு மென்ஷன் விருது அளிக்கப்பட்டது.
69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை 5 மணியளவில் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் தென்னிந்தியாவுக்கு நிறைய விருதுகள் கிடைத்துள்ளன.
கடைசி விவசாயி படத்தில் நடித்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல கருவறை குறும்படத்துக்காக..ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்ட்டது.
பி.லெனின் உருவாக்கிய சிற்பிகளின் சிற்பங்கள் படத்துக்கு சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான விருது கிடைத்தது. ஏக் தா கான் குறும்படத்துக்காக பின்னணிப் பாடகர் உண்ணி கிருஷ்ணனுக்கு விருது அளிக்கப்பட்டது.
சிறந்த தமிழ்த் திரைப்படமாக கடைசி விவசாயி தேர்வு செய்யப்பட்டது. காக்கா முட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டன் இயக்கிய படம் இது.
திரைப்படப் பிரிவில் சிறந்த நடிகராக புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விருது அலியா பட் மற்றும் கிருதி ஸனான் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். சிறந்த ஸ்டண்ட், நடனம் ஆகிய விருதுகளை ஆர்ஆர்ஆர் வென்றது. சிறந்த ஸ்பெஷல் எபக்ட்டுக்கான விருதையும் ஆர் ஆர் ஆர் வென்றது.
சிறந்த பாடலுக்கான இசையமைப்பாளராக புஷ்பா படத்துக்கு இசையமைத்த தேவிஸ்ரீபிரசாத் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பின்னணி இசையமைப்பாளராக ஆர்ஆர்ஆர் படத்துக்கு இசையமைத்த கீரவாணி தேர்வு செய்யப்பட்டார்.
ஆர். பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்துக்காக சிறந்த பின்னணிப் பாடகியாக ஸ்ரேயா கோஷல் தேர்வானார். சிறந்த பொழுது போக்குப் படமாக ஆர்ஆர்ஆர் தேர்வு செய்யப்பட்டது. அப்படத்துக்கு 5 விருதுகள் கிடத்துள்ளன.
தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக மாதவன் நடித்த ராக்கெட்ரி படம் தேர்வானது. தேசிய ஒற்றுமைக்கான நர்கீஸ் தத் விருது தி காஷ்மீர் பைல்ஸ் படத்துக்குக் கிடைத்துள்ளது.