68th Filmfare Awards 2023.. கமல்ஹாசன் சிறந்த நடிகர்.. வேண்டாம் என்று சொன்ன விருது மீண்டும் வந்தது!

Su.tha Arivalagan
Jul 12, 2024,08:40 AM IST

சென்னை: பிலிம்பேர் விருதுகளை இனி எனக்குத் தர வேண்டாம். மற்ற கலைஞர்களுக்குக் கொடுங்கள் என்று சொன்ன கமல்ஹாசனை மீண்டும் சிறந்த நடிகராக தேர்வு செய்துள்ளது பிலிம்பேர் விருதுக் குழு. விக்ரம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு கமல்ஹாசனை தேர்வு செய்துள்ளனர்.


விருதுகள் பெறுவதற்காகவே பிறந்த கலைஞர் என்று கமல்ஹாசனைக் கூறலாம். இந்தியாவில் அவர் வாங்காத விருதுகளே இல்லை. தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது முதல் உள்ளூர் விருதுகளை வரை எல்லாவற்றையும் வாங்கி விட்டார். ஒவ்வொரு விருதுகள் அறிவிப்பின்போதும் இந்த முறை கமலுக்கு விருது உள்ளதா என்றுதான் எல்லோரும் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொரு அறிவிப்பையும் விசேஷமாக்கிய படைப்பாளி கமல்ஹாசன்.




பிலிம்பேர் விருதுகள் ஒரு காலத்தில் தொடர்ந்து கமல்ஹாசனுக்கே கிடைத்து வந்தது. இதனால் ஒரு கட்டத்தில் எனக்கு இனிமேல் விருதுகளே வேண்டாம். என்னைப் பரிசீலிக்காதீர்கள்.. மற்ற கலைஞர்களுக்கு கொடுங்கள் என்று கமல்ஹாசனே சொல்லும் நிலைமை வந்தது. அந்த அளவுக்கு பிலிம்பேர் விருதுகளை தொடர்ந்து தட்டிச் சென்றவர் கமல்ஹாசன்.


இதோ மீண்டும் ஒரு முறை பிலிம்பேர் கமல்ஹாசனை சிறந்த நடிகராக தேர்வு செய்து அறிவித்துள்ளது. 2022ல் வெளியாகி பெரும் சாதனை படைத்த விக்ரம் படத்துக்காக கமல்ஹாசனை சிறந்த நடிகராக 68வது பிலிம்பேர் விருதுகள் (தெற்கு) குழு தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டே நடந்திருக்க வேண்டிய விழா இது. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழில்  விருதுகள் பெற்றோர் பட்டியல்:

 



சிறந்த படம் - பொன்னியின் செல்வன் 1

சிறந்த இயக்குநர் - மணிரத்தினம் (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த படம் (விமர்சகர்கள்) - கடைசி விவசாயி (இயக்குநர் மணிகண்டன்)

சிறந்த நடிகர் (ஹீரோ) -  கமல்ஹாசன் (விக்ரம்)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள் ) - தனுஷ் (திருச்சிற்றம்பலம்), ஆர். மாதவன் (ராக்கெட்ரி - தி நம்பி எபக்ட்)

சிறந்த நடிகை (ஹீரோயின்) - சாய் பல்லவி (கார்கி)

சிறந்த நடிகை (விமர்சகர்கள்) - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) 

சிறந்த துணை நடிகர்  - காளி வெங்கட் (கார்கி)

சிறந்த துணை நடிகை - ஊர்வசி (வீட்ல விசேஷங்க)

சிறந்த இசை - ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த பாடல்கள் - தாமரை (மறக்குமா நெஞ்சம் - வெந்து தணிந்தது காடு)

சிறந்த  பாடகர் - சந்தோஷ் நாராயணன் (தேன்மொழி - திருச்சிற்றம்பலம்)

சிறந்த பாடகி - அந்தாரா நந்தி (அலைகடல் - பொன்னியன் செல்வன் 1)

சிறந்த  அறிமுக நாயகி - அதிதி ஷங்கர் (விருமன்)

சிறந்த அறிமுக நாயகன் - பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)

சிறந்த ஒளிப்பதிவாளர் - கே.கே. செந்தில் குமார் (ஆர்ஆர்ஆர்), ரவிவர்மன் (பொன்னியின் செல்வன் 1)


கமல்ஹாசன் சாதனைகள்:




அகில அந்திய அளவிலான பிலிம்பேர் விருதுகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிலிருந்து அதிக விருதுகள் பெற்ற சாதனையாளராக ஏ.ஆர். ரஹ்மான் திகழ்கிறார். அதேசமயம், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளைப் பொறுத்தவரை அதிக அளவிலான விருதுகளைப் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் என்றால், அதிக விருதுகள் பெற்ற நாயகனாக கமல்ஹாசன்தான் உச்சியில் இருக்கிறார்.


பிலிம்பேர் விருதுகளில் கமல் செய்த சாதனைகள் பெரிது. வேறு எந்த ஹீரோவும் இந்த சாதனையைச் செய்ததில்லை.  அதிக அளவில் விருதுகள் வென்ற ஹீரோ கமல்ஹாசன் தான். மொத்தம் 11 விருதுகளை அவர் வென்றுள்ளார். அதிக அளவிலான நாமினேஷனும் அவருக்குத்தான் கிடைத்துள்ளது. அதாவது மொத்தம் 34 நாமினேஷன்கள். தொடர்ச்சியாக அதிக அளவில் நாமினேட் செய்யப்பட்டவரும் கமல்தான். 1985ம் ஆண்டு முதல் 1996 வரை மொத்தம் 12 முறை தொடர்ச்சியாக அவர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.


இளம் வயதில் விருது பெற்ற முதல் நாயகன் கமல்ஹாசன்தான். அதாவது அவரது 21வது வயதில் தனது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றவர் கமல்ஹாசன்.  தொடர்ச்சியாக அதிக விருதுகளை வென்றவரும் கமல்ஹாசன்தான்.  அதாவது 1975ம் ஆண்டு முதல் 1978 வரை மொத்தம் 4 விருதுகளை அவர் வென்றுள்ளார்.


கமல்ஹாசன் கடைசியாக பிலிம்பேர் விருது வாங்கிய வருடம் 2000. ஹே ராம் படத்துக்காக அந்த விருது கிடைத்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட 24 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் பிலிம்பேர் விருது அவரைத் தேடி வந்துள்ளது. இந்தியன் படத்துக்காகவும் சிறந்த நடிகர் விருதைப் பெற்றவர் கமல்ஹாசன். தற்போது இந்தியன் 2 வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் அவருக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படிக் கிடைத்தால் சீக்வெல் படங்களில் நடித்து, 2 முறையும் சிறந்த நடிகர் விருது பெற்ற முதல் ஹீரோவாக கமல் உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.