ஊட்டியில் பரிதாபம்.. கட்டுமான பணியின் போது.. மண் சரிவு.. 6 பெண்கள் பலி.. நடந்தது என்ன?

Manjula Devi
Feb 07, 2024,06:21 PM IST

ஊட்டி:  நீலகிரி மாவட்டம் ஊட்டியில், வீடு கட்டுமானத்தின் போது 8 பெண்கள் மண் சரிவில் சிக்கிய நிலையில், அதில் 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஊட்டி காந்தி நகரில் பிஜ்ஜால் என்பவர் சொந்த வீடு கட்டி வருகிறார். இப்பகுதியில் வீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணிகள் மும்மரமாக நடந்து வந்தது.  கட்டுமான பணியின் போது வீட்டின் பக்கவாட்டு பகுதியில் 8 பெண்கள் மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். 




அப்போது அந்த பகுதியில் உள்ள பழைய கழிவறை ஒன்று அப்படியே இடிந்து விழுந்து மண் சரிந்தது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் சிக்கிக் கொண்டனர். அதில் ஆறு பேர் தற்போது பலியாகி விட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உயிரிழந்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


3 பேர் மீது வழக்கு


இதற்கிடையே, இந்த அசம்பாவிதம் தொடர்பாக நில உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 3 பேரிடமும் தனி இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுமானப் பணியில் விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இறந்த பெண்களின் குடும்பங்களுக்கு அவர் இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.