காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலை வெடிவிபத்து.. 6 பேர் பலி.. பலர் படுகாயம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 6 பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் என்ற பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டுவந்தது. இந்த பட்டாசு ஆலைக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வேலைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் பணிக்கு வந்துள்ளனர்.
பட்டாசு ஆலையில் வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் உரசி பட்டாசு தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் பலர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காட்சியார், காவல் கண்காணிப்பாளர் விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வெடிவிபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சுதர்சன் வெடிவிபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் வெடி விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.