நடிகர் நெப்போலியன் வசிக்கும் நாஷ்வில்லியில் துப்பாக்கிச் சூடு.. 6 பேர் பலி!

Su.tha Arivalagan
Mar 28, 2023,10:09 AM IST
வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானார்கள். ஆட்ரி ஹாலே என்ற 28 வயது திருநங்கை நபர் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

நடிகர் நெப்போலியன் வசித்து வரும் நாஷ்வில்லி நகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள தனியார் தொடக்கப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்தான் இந்த ஆட்ரி ஹாலே.   துப்பாக்கிச் சூட்டில் ஈடுட்ட ஆட்ரியிடமிருந்து பள்ளிக்கூடத்தின் வரைபடம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட தாக்குதல் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஆட்ரியை பின்னர் போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர்.



இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்,  பள்ளிக்கூடத்தின் முழுமையான வரைபடம் ஆட்ரியிடம் இருந்தது. தாக்குதலை மிகவும் தெளிவாக திட்டமிட்டு நடத்தியுள்ளார். இந்தப் பள்ளிக்கூடம் தவிர வேறு சில இடங்களிலும் துப்பாக்கிச் சூடு நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.

தனது கையில் இரண்டு தாக்குல் துப்பாக்கிகளையும், ஒரு கைத் துப்பாக்கியையும் சுமந்து கொண்டு பள்ளிக்குள் (கோவினன்ட் கிறிஸ்தவப் பள்ளி)  நுழைந்துள்ளார் ஆட்ரி.  ஒரு வகுப்பறைக்குள் சரமாரியாக முதலில் சுட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து அடுத்த பகுதிக்கு முன்னேறினார்.

இந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 9 வயதுடைய எவலின் டிக்காஸ், ஹாலி ஸ்கிரப்ஸ், வில்லியம் கின்னி, 61 வயதுடைய சிந்தியா பீக், 60 வயதுடைய காத்தரின் கூன்ஸ், 61 வயதுடைய மைக் ஹில் ஆகியோர் பலியானார்கள். ஆட்ரி ஹாலே ஒரு திருநங்கை என்று சந்தேகிக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதைக்கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்து வருகிறது.