சென்னை பீச்-தாம்பரம்-செங்கல்பட்டு.. ரயில் ரத்தில் மாற்றம்.. பகல் நேர ரயில்கள் வழக்கம் போல இயங்கும்

Su.tha Arivalagan
Jul 22, 2024,09:51 PM IST

சென்னை:   ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை–தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் தற்போது அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


அதன்படி பகல் நேரங்களில் ரயில் இயங்கும் என்றும் இரவு நேரத்தில் மட்டும் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


திருத்தப்பட்ட ரயில் நேர விவரம்


முன்னதாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி, தாம்பரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ஆகிய மார்க்கங்களில் ரத்து செய்யப்படும் 55 ரயில்கள் குறித்த முழு விவரத்தையும், நேர வரிசைப்படி தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.




பகல் நேர ரயில் சேவை ரத்து இல்லை:


தற்போது அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஜூலை 23 முதல் 26 வரையிலும், ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரையிலும் வழக்கம் போல பகல் நேர ரயில்கள் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  அதேபோல ஜூலை 27, 28 மற்றும் அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல ரயில் சேவை ரத்து அமல்படுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதற்காக பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநில போக்குவரத்துத் துறைக்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது. பயணிகளுக்கு உதவுவதற்காக சென்னை எழும்பூர், பல்லவாரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் உதவி மையம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.  பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் செங்கல்பட்டிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் இயக்கப்படவுள்ளது.